காலைக்கதிர் செய்தியாளர் மீதான தாக்குதல்; தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்த பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது.

கடந்த இரு தசாப்த காலத்தில் தமிழ் ஊடகங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை வெறித் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட எவரும் சட்டத்தின் முன்னால் இதுவரை நிறுத்தப்படாத நிலையில், இப்போது இடம்பெற்றுள்ள தாக்குதல் மற்றொரு இருண்ட யுகத்துக்கான ஆரம்பமா என்ற கேள்வி எழுவதாகவும் ஒன்றியத்தின் சார்பில் அதன் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

யாழ்.மாநகரின் புறநகர் பகுதியான கொழும்புத்துறை துண்டி பகுதியில் திங்கள் காலை இராஜேந்திரனை இடைமறித்த 10 பேர் கொண்ட குழு அவர் மீது சரமாரியாக வாள்களால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது. 5 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட பாணி இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என்பதைக் காட்டுகின்றது.

கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் ஊடக அமைப்புக்கள் வலியுறுத்திவரும் நிலையில், இவ்வாறான கொடூர தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருப்பது ஊடகத்துறை சார்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்தும் அதேவேளையில், இத்தாக்குதலைக் கண்டித்தும், விசாரணையை வலியுறுத்தியும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.